2025ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக செல்வ வரி ஒன்று அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த வரி நாட்டின் பெரும்பான்மையினருக்கு பொருந்தாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்…
நாட்டில் 80 சதவீதமானோருக்கு இந்த வரி தாக்கத்தை ஏற்படுத்தாது. நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வரிகளை வசூலிப்பதற்காக புதிய வருவாய் அதிகார சபையொன்றை அமைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வழங்கப்படும்.
சிறிது காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சாதாரண மட்டத்திற்கு கொண்டுவர முடியும். நூற்றுக்கு 5 வீதம் என்ற மட்டத்திற்கு கொண்டுவர முடியும். எனினும் எமக்கு அந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. குறைந்த பட்சம் நூற்றுக்கு 8 வீதம் என்ற மட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த வருடத்தின் பின்னர் நாட்டில் விரைவான வளர்ச்சி ஏற்படும். மிகவும் கடுமையான முடிவுகளை நான் எடுத்துவிட்டேன். எனினும் அனைவரது ஆதரவும் அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.