இந்த 2024 ஆரம்பமே ஜப்பான் நாட்டிற்கு மோசமாக இருந்துள்ளது. முதலில் புத்தாண்டு தினத்தில் ஜப்பான் நாட்டில் மிக மோசமான நிலநடுக்கம் தாக்கியது. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால் 30 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே ஜப்பான் நாட்டில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜப்பானில் நேற்றையதினம் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
டோக்கியோவில் இந்த விமானம் தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது மோதியதில் தீப்பற்றி பயங்கரமாக எரிந்துள்ளது. மேலும் ஓடுதளத்தில் நீண்ட தூரம் சென்ற பிறகே விமானம் நின்றுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 379 பயணிகள் இருந்ததை ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்நிலையில் விமானத்திலிருந்த 379 பேரும் பத்திரமாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர். ஆனால், கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்திலிருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 6 பேர் வரை இருந்துள்ளனர். தற்போது ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.