கொவிட் கால சுகாதார விதிகளை மீண்டும் பின்பற்றுங்கள் – இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சர் வேண்டுகோள்..!!
இலங்கை மக்கள் கொவிட் காலத்தில் பின்பற்றிய சுகாதார விதிகளை மீண்டும் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பதிவாகியுள்ள ‘ஜே.என். 1’ புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருக்கின்றது என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்தவொரு கோவிட் தொற்றாளரும் பதிவாகவில்லை.
எனினும், கடந்த கோவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் கீழ், உயர் தரத்திலான மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கோவிட் நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது, நாட்டின் நிதி நிலை சீராக முன்னேறி வருவதால், அத்தியாவசிய மருந்துகளை பெற, அரசின் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, கடந்த வருடம் டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையான நிலை என்பதோடு டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த சமூகத்தின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.
அத்துடன், பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உதவியுடன் சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இது தவிர, இந்தியாவில் பதிவாகிவரும் புதிய ‘ஜே.என். 1’ கோவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது.
தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். ‘ஜே.என். 1’ கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், இது தொடர்பாக மாதிரி சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்தியாவில் பதிவாகியுள்ள புதிய கொவிட் பிறழ்வு கொண்ட நோயாளிகள் யாரும் இலங்கையில் பதிவாகவில்லை. ஆனால், கடந்த கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.