பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் – அண்ணாமலை..!!
இந்தியா: தமிழ்நாடு
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை கூறியதாவது…
ஏழை மக்களுக்காக ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 31 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. 9 ஆண்டு கால மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். மது குடிப்பதை தடுக்க முடியாது. தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.
தமிழக அரசு டாஸ்மாக் நடத்துவது அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக இல்லை. திமுகவினரின் நடத்தும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.