இந்தியா
Trending

ராமர் கோயில் கட்டிட்டா தேர்தலில் ஜெயிச்சிருவாரா? – பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!

இந்தியா: தமிழ்நாடு

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. பாஜகவுடனாக கூட்டணியை முறித்துக் கொண்டதால் எடப்பாடி, கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டதால், மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். கோயில் கட்டியதால் மட்டும் மக்கள் வாக்களித்து விடுவார்களா? நான் முதல்வராக இருந்த போது, ஏராளமான கோயில்களை கட்டி இருக்கிறோம். புனரமைத்தும் இருக்கிறோம். சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் பழுது பார்க்க நிதி கொடுத்திருக்கிறோம். அப்படி பார்த்தால் கோயில் கட்டியதற்காக அதிமுக தான் வெற்றி பெறும் என்று சொல்லலாமா? அதாவது அதிமுகவை பொறுத்தவரை நாங்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி.

ராமர் கோயிலை திறந்ததால் அனைவரும் மோடி பின்னால் செல்வார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. கோயில் கட்டினால் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்றால், எல்லா கட்சிகளும் மக்கள் நலப் பணிகளை தூக்கிப் போட்டு விட்டு, கோயில் கட்ட கிளம்பி போய் விடுவார்களே. அதனால் இது எல்லாம் ஒன்றுக்கும் உதவாத வாதம்.

இந்தியா ஜாதி, மதம் பேதமற்ற நாடு. யார் யாருக்கு எந்தக் கடவுளை பிடிக்கிறதோ, அதை அவர்கள் வணங்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் கோயில்களை கட்டுகிறார்கள். கோயில் ஒன்றை கட்டிவிட்டதால், தேர்தலில் ஓட்டு கிடைக்கும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி ஒருவேளை, மக்கள் ஓட்டு போட்டால், எடப்பாடியில் அதிமுக தான் போட்டியே இல்லாமல் வெற்றி பெறும். அந்த அளவுக்கு நான் கோயில்களை கட்டியுள்ளேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button