யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே குறித்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றது.
சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றனர்.
சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு
பொலிஸாருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரை கைது செய்தனர்.
சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் பொலிஸார், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.