நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (16) மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் இணைப்புக் குழுவின் தலைவர் எஸ்.பி. திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக சட்டத்தரணி லலித் யூ. கமகே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், மருதுபாண்டி ராமேஸ்வரன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரும் சில முக்கிய அரச அதிகாரிகளும் கலந்துகொண்டு, நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலே முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது முக்கிய விடயமாக நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியினை மீண்டும் திறந்து கனரக வாகனங்கள் செல்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி கடந்த காலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதியில் குறித்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் அடங்கலாக 7 பேர் உயிரிழந்ததைமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலரின் சுயதேவைக்காக குறித்த வீதியில் திறக்க கோரி கடந்த நாட்களில் நுவரெலியா தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டு தமக்கும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணிப்பதற்கு அனுமதி வேண்டுமென வலியுறுத்தி இருந்தனர். குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைத்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கூறியதாவது, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து இன்றி பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன இதற்காகவே நாங்கள் குறித்த வீதியில் பேருந்து சேவையை ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றனர்.
இதற்கு இக்குழு கூட்டத்தில் கலந்துக்கொன்டு கருத்து தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியதாவது, குறித்த வீதியில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டது இதன் காரணமாக நானுஓயா குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது எனவும், குறித்து வீதியை மீண்டும் திறந்து அதில் ஏற்படும் விபத்துகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் யார் பொறுப்பு கூறுவது என்று கேட்ட கேள்விக்கு யாரும் பதில் அளிக்காமல் இருந்தனர். எனவே, நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும், குறித்த வீதி மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே வீதியினை திறக்க யாரும் முயற்சிக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.