வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் கையளிக்கப்பட்டது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS)-பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்’ என்ற 24/0696/604/079 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையிலான உப குழுவில் அமைச்சர்களான டிரான் அலஸ், நளீன் பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பின் பயன்பாட்டுத் திறன் தொடர்பான உடனடித் தலையீட்டின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையில் 7 முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.