ஐந்தாவது மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடவுள்ளன.
2008க்கு முன்னர் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்கு தடவைகள் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை, ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2022இல் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தானுடனான இன்றைய அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது.
பி குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆரம்ப வீராங்கனைகளான அணித் தலைவி சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிகளை இலகுபடுத்தியதால் ஏனைய வீராங்கனைகளுக்கு துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் அதிகமாகத் தேவைப்படவில்லை.
இந்த வருடம் ரி20 போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி வந்துள்ள இலங்கை மகளிர் அணி 15 போட்டிகளில் 12இல் வெற்றிபெற்றிருந்தது.
இவ்வாறாக திறமையை வெளிப்படுத்திவந்துள்ள இலங்கை இம்முறை முதல் தடவை சம்பியன் பட்டத்தை சூட முயற்சிக்கவுள்ளது.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை விளையாடப்பட்டுள்ள 19 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 10 – 8 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் இலங்கை ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்டிருந்தது.
இம்முறை இலங்கை தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா எதிர் பங்களாதேஷ்
நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்ததாக காணப்படுவதால் இன்றைய போட்டியில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நம்பப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துள்ள 22 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 19 – 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறது.
எவ்வாறாயினும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளன.
சில்ஹெட்டில் 2022இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் இந்தியாவை பங்களாதேஷ் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது.
ஆனால், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் சாதிக்கும் என எதிர்பார்க்கமுடியாது.