இந்நாட்டில் குழந்தைகளின் நித்திரை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளைகளுக்கு சுகமான உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும் என விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கைச் குழந்தைகள் மத்தியில் நித்திரை குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, ஒரு வயது வரை 25% குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை உள்ளது.
மேலும், இளமை பருவத்தில் தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் முதியவர்கள் மற்றும் இளைஞர்களின் தூக்கத்தில் சில சிக்கல் நிலைமைகள் இருப்பதாக இலங்கையில் கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் காட்டுகிறது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு ஆழ்ந்த நினைவாற்றலாக நிலையான நினைவாற்றல் இருக்க நல்ல தூக்கம் அவசியம்.
அவர்கள் சிறு வயதிலிருந்தே நல்ல உறக்கத்திற்கு பழக வேண்டும்.” என்றார்.
இதேவேளை, ஒவ்வொரு வயதினரும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“பிறந்து மூன்று மாதங்களுக்கு சுமார் 14-17 மணி நேரம் உறங்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளில் உள்ளன.
4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 வயது வரை 11 முதல் 14 மணி நேரம், 3 முதல் 4 வயது வரை 10 முதல் 13 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 12 மணி நேரம் உறக்கம் தேவை.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 24 மணித்தியாலங்களில் 50% க்கும் அதிகமான உறக்கம் தேவை.
இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். வயதானவர்கள் குறைந்தது 7 மணிநேரம் உறங்க வேண்டும்” என்றார்.