ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கு கிராம அலுவலர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிடம் “அத தெரண” வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இன்றும் (12ம் திகதி) நாளையும் (13ம் திகதி) சகல கடமைகளில் இருந்தும் விலகி நாடு முழுவதும் ஒரு வார போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம அலுவலர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பில் தமது முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாத காரணத்தினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.
இன்று காலை பொதுநிர்வாக அமைச்சுக்கு முன்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.