புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும் உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் இந்தியாமுழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்
இந்நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும் அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது ‘‘இவ்வழக்கை கொல்கத்தா போலீஸார் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தடயங்கள்இஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது’’ என்று குற்றம்சாட்டினர்.