அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பெல்பாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க, இப்போதைக்கு அயர்லாந்து 2 – 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் குவித்தபோதிலும் இறுதியில் அது வீண்போனது.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 3ஆவது வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆவார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது.
31 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து 4 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால் எஞ்சிய 19 ஓவர்களில் அயர்லாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மேலும் 121 ஓட்டங்களைக் குவித்தது.