சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே எமது வெற்றிக்கு காரணம் என்றும் அதனை மாற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது என்றும் அதன் விளைவுகளை நாட்டு மக்களே சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், தான் அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தியே அரசியல் செய்வதாகவும் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி ஒருபோதும் நான் அரசியல் செய்வதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஜனாதிபதி, பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் சிந்துத்து செயற்பட வேண்டும் 2022 மே, ஜூன், ஜூலை மாதங்களில் மக்கள் கடும் பசியில் இருந்தனர். உணவு, எரிபொருள், மருந்து, வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். இரு போகங்கள் விளைச்சல் செய்யவில்லை. சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. அப்படியான நிலையில் நாட்டை ஏற்றேன்.
நாட்டுத் தலைவன் என்ற வகையில் மக்கள் கஷ்டத்தை நான் விரும்பவில்லை. மக்களை கஷ்டத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதே எனது நோக்கம். தனியொரு எம்.பியாக இந்த பொறுப்பை ஏற்றேன். அதன் பின்னர் நல்ல விளைச்சல் நாட்டுக்கு கிடைத்தது.
இவ்வருடமும் விளைச்சல் சிறப்பாக இருந்தது. அடுத்த வருடமும் சாத்தியமாக அமையுமென நம்புகிறோம், எந்த வயலும் வெறுமையாக கிடைக்கவில்லை. அதனை செய்ததால் சஜித் நான் திருடர்களோடு வேலை செய்தேன் என்கிறார். நான் பதவி ஆசையில் ஏற்றுக்கொண்டதாக சொல்கிறார். அவருக்கு கிடைக்க இருந்த பதவி என்கிறார்.
அவருக்கு மக்கள் கஷ்டம் புரியவில்லையா? புரிந்திருந்தால் ஜனாதிபதி பதவியை ஏற்றிருக்கலாம். அப்போது சுயநலமாக யோசித்தனர். தீர்வுகாண முடியாது என்று பயந்து, தப்பியோடி ஒளிந்தனர்.
இப்போது என்னை சாடுகின்றனர். மக்கள் பிரச்சினையைத் தீர்த்துவைத்தேன். செய்யவில்லை என்றால் என்னைச் சாடுவதை ஏற்றுக்கொள்வேன். அன்று செய்ய முடியாவர்கள் இன்று என்ன செய்யப் போகிறார்கள். இலங்கை ரூபாயின் பெறுமதியை அதிகரித்தோம். 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மொத்த தேசிய உற்பத்தி குன்றிப் போனது. டொலர் பெறுமதி அதிகரித்து, பணவீக்கம் அதிகரித்தது. இன்று அனைத்து பிரச்சினைகளையும் மட்டுப்படுத்தியுள்ளோம்.
அடுத்த வருடத்தில் இந்த பிரச்சினைகளை மேலும் மட்டுப்படுத்தி தேசிய உற்பத்தியை அதிகரிப்போம். அப்போது தான் மக்கள் பொருட்களின் விலையை தாங்கிக்கொள்ளும் நிலைமை வரும். நாம் குறிப்பிட்ட தூரம் மட்டுமே வந்திருக்கிறோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
சமுர்த்திக்கு பதிலாக மும்மடங்கு அஸ்வெசும வழங்கினோம். 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரச ஊழியர்களுக்கு வழங்கினோம். எதிர்வரும் வருடங்களில் 25 ஆயிரமாக அதிகரிப்போம். இதனையே ஐக்கிய மக்கள் சக்தியினர் பிழை என்று சொல்கிறார்கள்.
நாம் இப்பகுதியிலும் விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். பொத்துவில் பகுதியை பிரதான சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்வோம். நிலக்கடலைத் தோட்டம் ஒன்றையும் ஆரம்பிப்போம். ஐக்கிய மக்கள் சக்தியால், தேசிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியுமா?
ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ரிஷாடும், ஹக்கீமும் எதிர்த்தனர். நான் தேர்தலில் தோற்றேன். அவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் எனது அரசாங்கம் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கோரினேன். அது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சர் அலி சப்ரி கொண்டு வருவார். இலங்கைக்காகவே அரசாங்கம் முன்னிலையாகும். அனைத்து இன மக்களையும் பாதுகாப்போம்.
அரசியல் கொள்கைகளை செயற்படுத்துவோம். நான் ஒருபோதும் இன, மதத்தை சொல்லி அரசியல் செய்யமாட்டேன். அதனால் அரசாங்கத்தினால் மக்களைப் பாதுகாக்க முடியும். பிறரின் உதவி தேவையில்லை. முன்னோக்கிச் செல்வதே முக்கியம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே எமது வெற்றிக்கு காரணம். அவர்களின் நிபந்தனைகளை மீற முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி மீறுவோம் என்கிறது.
அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும். அவ்வாறானர்களிடம் எதிர்காலத்தை கையளிக்க வேண்டுமா? செப்டெம்பர் 21 ஆம் திகதி உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள். அதனை புரிந்துகொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இல்லை என்று கண்ணீர் விடாதீர்கள். ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் அலி சப்ரி:
இன்று உங்கள் பிரதேசத்தின் வைத்தியசாலைப் பிரச்சினை, காணிப் பிரச்சினை, வீதிப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்துள்ளன. இன்று இலங்கையில் இன, மத பேதமின்றி நிம்மதியாக வாழும் சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இதனை நாம் மாற்ற வேண்டுமா? 2022 காலப்பகுதியில் பல மணித்தியாலங்கள் மின்வெட்டு, பல நாட்களாக எரிபொருள் வரிசைகள், மாதக்கணக்கில் எரிவாயு இல்லை, வைத்தியசாலைகளில் மருந்து இல்லை,அந்த நிலைமையில் நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை.
இன்று கூக்குரலிடும் எதிர்கட்சிக்கு, இந்நாட்டின் பொருளாதார நிலைமை காணமாக அன்று இந்நாட்டைப் பொறுப்பேற்று முன்னெடுப்பதற்கான தன்னம்பிக்கை இருக்கவில்லை. அதனால் அவர்கள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இந்நாட்டை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
முழு நாட்டினதும் சுற்றுலாத்துறை இன்று அபிவிருத்தியடைந்துள்ளது. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சவால் அல்ல. அதன் பிறகு நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதே உண்மையான சவாலாகும். தேர்தலில் பாரிய வெற்றி பெற்றும், அன்று இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இரண்டு வருடங்களுக்குள் நாடு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டை, ரணில் விக்ரமசிங்கவே மீட்டெடுத்தார். அவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் மாற்ற வேண்டுமா? யாருக்கும் மேடைகளில் வீரவசனங்கள் கூறி வாக்குகளைப் பெறலாம்.
நான் அமைச்சரவையில் இருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை பற்றி எனக்குத் தெரியும். சர்வதேச நாடுகளுடன் அவருக்கு இருக்கும் உறவு காரணமாகவே நாம் சர்வதேச நாணய நிதியத்ததுடன் கலந்துரையாடல்களை நடத்த முடிந்தது. எதிர்க்கட்சிகள் ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தங்களை மீறிச் செயற்பட்டால் எமக்கு சர்வதேச நிதி உதவிகள் கிடைக்காது. அப்போது மீண்டும் இந்த நாட்டில் வரிசை யுகங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இன்று நாட்டை எமக்குத் தாருங்கள் நாம் செய்து காட்டுகிறோம் என்று கூறும் எதிர்க்கட்சியினர் ஏன் அன்று பொறுப்பேற்கவில்லை.
அப்போது செய்ய முடியாதவர்களா இப்போது செய்வார்களா? அவரை மாற்றி இன்னொருவரை கொண்டு வர வேண்டுமா என்று உங்களிடம் கேட்கிறேன். எனவே இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்ய ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.