பாரிஸ்: கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராமின் பிரதமநிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது.
இந்நிலையில் இது குறித்து பாரிஸ் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது தீவிரவாத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த ஐரோப்பிய யூனியனின் விதிகளுக்கு டெலிகிராம் அனைத்து வகையிலும் இணங்க செயல்படுகிறது. இந்த சூழலில் டெலிகிராம் செயலியில் அரங்கேறும் குற்றத்தில் அவர் சிக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளதாக பவெல் துரோவின் வழக்கறிஞர் டேவிட் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் விசாரணை அதிகாரிகளின் கேட்டிருந்த விவரங்களுக்கு டெலிகிராம் தரப்பில் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அது தொடர்பாக விசாரணை நடந்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கம் தந்துள்ளார்.
இந்த வழக்கு மட்டுமல்லாது தனது மகனை துன்புறுத்திய குற்றச்சாட்டும் பவெல் துரோவ் மீது உள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டிலும் அவரது முன்னாள் வாழ்க்கை துணை புகார் அளித்துள்ளார்.