
Shanu
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஈரானை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தபோது ஈரானை கடுமையாக எதிர்த்தார். பொருளாதார தடைகளை விதித்தார். அதோடு ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி திட்டத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
ஆனாலும் ஈரான் கவலையடையவில்லை. ஈரான் தொடர்ந்து அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தான். இந்த 2 நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. மேலும் தற்போது அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் வந்துள்ளார். டொனால்ட் டிரம்பை ஈரான் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவால் ஆபத்து வரலாம் என்று ஈரான் நினைக்கிறது. அதேபோல் இஸ்ரேலுடன் ஈரானுக்கு பகை உள்ள நிலையில் அமெரிக்கா அந்த நாட்டுடன் நெருங்கிய நட்பில் உள்ளது. இதனால் இஸ்ரேலையும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் அட்டாக்’ செய்யலாம் என்பதால் ஈரான் தலைவர்கள் தனது நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து அணுசக்தி திட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதுமட்டுமின்றி அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து டொனால்ட் டிரம்ப் சார்பில் ஈரானுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால் ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா தடுக்கும்” என்று வார்னிங் செய்யப்பட்டது. இதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ‛‛அமெரிக்கா உத்தரவுகளை பிறப்பித்து அதன் வழியாக எங்களை மிரட்டுவததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு போகமாட்டேன். அமெரிக்கா விரும்பியதை செய்யட்டும்” என்று பதிலடி கொடுத்தார். இதனால் இருநாடுகள் இடையே பிரச்சனை என்பது இன்னும் முற்றியுள்ளது.