எத்தனை வழக்கு வந்தாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம் – திருமாவுடன் சேர்ந்து உதயநிதி முழக்கம்…!!
தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்தித்தனர்.
அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. முதலில் திருமாவளவன் கையெழுத்திட பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
சனாதனம் என்பது பல நூற்றாண்டு பிரச்சனை. சனாதனத்தை நாங்கள் எந்த நாளும் எதிர்ப்போம். சனாதனம் குறித்து பேசியதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை நாங்கள் சந்திப்போம். தற்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
அனைத்து இயக்கத்தினரையும் இது தொடர்பாக சந்திக்க உள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்ட பின்னர் ஜனாதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அப்போது திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்தி இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.