நடிகர் கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
படத்திற்கு Thug Life என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் கமிட்டாகியுள்ளனர். படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1987ம் ஆண்டில் கமல் -மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் 35 ஆண்டுகளை கடந்து மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர்களும் அறிவிப்பு வீடியோவும் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் கமலின் கேரக்டர் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக அவர் நடித்திருந்த நாயகன் படத்தில் சக்திவேல் நாயக்கர் என்ற அவரது கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கேரக்டர் பெயரில் அவர் மீண்டும் 35 ஆண்டுகள் கழித்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ அதிரடி சரவெடியாக அமைந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்கு சக்திவேல் என்று பெயரிட படக்குழுவினர் முடிவெடுத்திருந்ததாகவும் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல்ஹாசன் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் அறிமுக வீடியோ, டைட்டில், படத்தின் நடிகர்கள் என அடுத்தடுத்த அறிவிப்புகளை மேற்கொண்ட படக்குழுவினர், இன்றைய தினம் கமலின் பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டரையும் வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.