இந்தியா
Trending

அண்ணாமலையுடன் பாதயாத்திரை போகிறவர்கள் பாஜகவினரே அல்ல – திருமாவளவன்…!!

தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் உடன் செல்பவர்கள் யாருமே பாஜகவினர் அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது அவர் கூறியதாவது…

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றுவோம்; இந்து சமய அறநிலையத்துறையை மூடுவோம் என அண்ணாமலை பேசுகிறார். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என அழைப்போம் என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது அண்ணாமலைக்கே நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டில் உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி, ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து நடைபயணத்தை மேற்கொள்கிறார்கள் எனில் பணம் எங்கிருந்து வருகிறது? யார் தருகிறார்கள்? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் யார்? நடந்து வருகிறவர்கள் யார்? என்பதை பார்க்க வேண்டும்.

அண்ணாமலையின் நடைபயணத்தில் தொண்டர்களாக பங்கேற்க கூடியவர்கள் அதிமுக, பாமகவினர்தான். அண்ணாமலையுடன் நடப்பது பாஜக தொண்டர்கள் இல்லை. இதன் மூலம் அதிமுக, பாமகவில் உள்ளவர்களை மெல்ல மெல்ல பாஜகவின் கருத்தியலுக்கும் அரசியலுக்கும் ஏற்ப மாற்றி வருகிறார்கள். அதாவது பலவீனப்படுத்தி வருகிறார்கள். இது அதிமுகவுக்குதான் பெரும் சேதத்தை விளைவிக்கும்.

திமுகவை எதிர்க்கும் வலிமை அதிமுகவுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அதிமுக ஒரு எதிர்க்கட்சி. பாஜகவின் 4 பேருமே அதிமுகவின் தயவில் வென்றவர்கள்தான். ஏனெனில் 90% அதிமுகவின் வாக்குகளைப் பெற்றுதான் ஜெயித்தார்கள். பாஜகவுக்கு கிளைகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button