ஹமாஸ் வீசிய கிரானைட் – காதலி கண்களை பார்த்து அடுத்த நொடி உயிர் தியாகம் செய்த இளைஞர்…!!
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரீன் ஷாவிட் என்ற இளம்பெண் நெட்டா எப்ஸ்டீன் என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார். முதல் டேட்டிலேயே எப்ஸ்டீனை அவருக்குப் பிடித்துப் போனது. ஏற்கனவே அந்த இளைஞரைக் காதலிக்கவும் தொடங்கிவிட்டதாக அந்தப் பெண் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காதல் ஊரே பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது. பிறகு ஒரு நாள் தனது காதலி ஷாவிட்டை பார்த்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி எப்ஸ்டீன் கேட்டுள்ளார். இதற்காகவே இத்தனை காலம் காத்திருந்த ஷாவிட் மறுநொடியே சம்மதம் தெரிவித்துள்ளார்.
இருவரும் புது வாழ்க்கையை ஆரம்பிக்க தாரான நிலையில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இருவரும் பட்டம் விடும் திருவிழாவுக்குச் செல்ல இருந்தனர். அப்போது காலை 6.30 மணிக்கே ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்துள்ளது. இருப்பினும், எல்லையில் அவ்வப்போது ரெட் அலர்ட் வரும் என்பதால் அவர்கள் பெரிதாக அச்சப்படவில்லை.
ஆனால், காலை 8 மணிக்கு ஹமாஸ் ஊடுருவல் காரணமாக மொத்தமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு முழுக்க இருந்த லைட்களை ஆப் செய்துவிட்டு அமைதியாக இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கே நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளது. தொலைதூரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தங்கள் கேட்டுள்ளன. இதில் எப்ஸ்டீனின் பாட்டி, அடுத்து அவரது சகோதரர் உயிரிழந்துள்ளார். காலை 11 மணியளவில் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ளே வந்துள்ளனர். இந்த ஜோடி ஓடிச் சென்று பெட் ரூமில் ஒளிந்து கொண்டனர்.
ஹமாஸ் வீரர்கள், பெட் ரூமில் இவர்கள் இருவரும் இருப்பதைக் கண்டுபிடித்து மொத்தம் மூன்று கிரானைட் கை எறி குண்டுகளை உள்ளே போட்டுள்ளனர். அப்போது ஷாவிட்டை ஒரு நொடி பார்த்த எப்ஸ்டீன் சற்றும் யோசிக்காமல் அந்த கிரானைட் மீது பாய்ந்துள்ளார். மூன்று கிரானைட்களும் தனது உடலுக்குக் கீழ் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
இது எப்ஸ்டீன் ராணுவத்தில் கற்ற யுக்தி ஆகும். அதாவது கிரானைட் குண்டுகள் மீது பாய்ந்தால் மற்றவர்களைக் காக்க முடியும். தனது காதலியைக் காக்க நொடியும் தாமதிக்காமல் அதன் மீது பாய்ந்துள்ளார் இவர். இந்த ஜோடி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஷாவிட் தனது திருமண உடையைக் கூட வாங்கியிருந்தார். ஆனால், இந்த ஜோடிக்கு இப்படியொரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தனிமையில் தவிக்கும் ஷாவிட் முடிந்தவரை இயல்பு நிலைக்கு வர முயற்சி செய்கிறார். ஆனால், அவரால் அந்த வேதனையில் இருந்து வெளியே வர முடியவில்லை.