‘பெரியார் பத்தி பேசினா நாங்க சும்மா இருக்க மாட்டோம்’ – அண்ணாமலைக்கு அன்புமணி எச்சரிக்கை…!!!
தமிழ்நாடு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவில்களுக்கு முன்பு உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்றார். மேலும் பெரியார் சிலையுடன் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ள பலகைகளும் அகற்றப்படும் என்றும் கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவினர் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தந்தை பெரியாரை யாரும் அவமதிக்கவில்லை, அவரை குறைத்து மதிப்பிடவில்லை. கோவில்களுக்கு முன்பு பெரியார் சிலை இருக்கக்கூடாது என்பதுதான் பாஜகவின் கருத்து என்றார்.!
மேலும் பெரியார் சிலை எங்கு வைக்கப்பட வேண்டுமோ அங்கு வைக்கப்படும், அதற்கான மரியாதை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசுவது தவறு. இது பெரியார் மண், அவர் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் சமூக நீதி இல்லை. இந்தியாவில் சமூக நீதியை தொடங்கி வைத்தவரே தந்தை பெரியார்தான் என்றார்.
மேலும் பெரியார் குறித்து அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சியினரோ இழிவாக பேசக்கூடாது. பாமாகவின் முன்னோடிகளாக பெரியார், அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களை பற்றி யாராவது தவறாக பேசினால் பாமக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரித்தார்.