தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அனைத்து பண்டிகைகள், விழாக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மட்டும் திமுக ‘மேலிட’ தலைவர்கள் பொதுவாக வாழ்த்து சொல்வது இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் இன்றைய முதல்வர் கருணாநிதி ஸ்டாலின் வரை யாரும் வாழ்த்து சொல்வதில்லை. இதனை ஒரு அரசியல் விமர்சனமாகவே பாஜகவினர் நீண்ட நெடுங்காலமாக முன்வைத்தும் வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது நரகாசுரன் என்கிற அசுரன் அழிக்கப்பட்ட நாள். வரலாற்று காலங்களில் பிராமணர்களை தேவர்களாகவும் திராவிடர்களை அசுரர்களாகவும் சித்தரிக்கும் போக்கு புராணங்களில் இருந்து வருகிறது என்பது திராவிட இயக்கத்தினர் விமர்சனமாகும்.
அப்படியான ஒரு புராணக் கதையை மையமாக கொண்டது நரகாசுரன் என்கிற திராவிட அரசன் வீழ்த்தப்பட்ட கதை. ஒரு காலத்தில் ஓர் அரக்கன் உலகத்தைப் பாயாக சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்துகொண்டான். தேவர்கள் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு வராக அவதாரம் (பன்றி உருவம்) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். விரித்த பூமி அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
ஆசைக்கு இணங்கிய பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் தொடங்கினார். விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை.விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) கொண்டாடுவதே தீபாவளி.
மேலும் நரகாசூரன் ஊர் மகிஷ்மதி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கின்றது. மற்றொரு ஊர் பிராக் ஜோதிஷம் என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அஸ்ஸாம் மாகாணத்திற்கு அருகில் இவற்றை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பெரியார்.
ஆகையால் “திராவிடப் பேரரசன்” நரகாசுரன் அழிக்கப்பட்ட நாள் திராவிடர்களுக்கு இன்பநாள் அல்ல. அது துக்க நாள். தீபாவளி திராவிடர் பண்டிகை அல்ல என்பது திராவிடர் இயக்கத்தின் கருத்தும் நிலைப்பாடும். இதனை பின்பற்றியே திமுக தலைவர்கள் அன்றும் இன்றும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகள் சொல்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.