தமிழ்நாடு
தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அண்ணாமலை நாள்தோறும் திட்டமிடுவதாகவும் இதனால் அவரை தான் முதலில் கைது செய்ய வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மக்களை தாம் இழிவுப்படுத்தவில்லை என்றும் நாய்கறி சாப்பிடுவது நாகாலாந்து மக்களின் கலாச்சாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்றமே தீர்ப்பில் உறுதி செய்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதை மேற்கோள் காட்டித் தான் தாம் பேசினேன் என்றும் மற்றபடி வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
யாருக்காகவும் பயந்து தனது கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன் எனக் கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, தாங்கள் கருணாநிதியிடம் அரசியல் கற்றவர்கள் என்பதால் எதையுமே சரியாகத்தான் செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களை கவனிக்க நேரமில்லாத ஆளுநருக்கு, திமுகவினர் எந்த மேடையில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மட்டும் நேரம் இருக்கிறதா என வினவியுள்ளார்.
நாகா மக்களை புண்படுத்தும் வகையில் தாம் பேசாத போது அதை மிகைப்படுத்தி ஆளுநர் ரவி அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாகா மக்களை நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று கூறியதற்காக தன்னை கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை கூறுவது, வேடிக்கையாக உள்ளது என்றும் குற்றவாளி நிரபராதியை பார்த்து அவரை கைது செய்யுங்கள் எனச் சொல்வது போல் உள்ளது எனவும் கிண்டல் செய்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அண்ணாமலை நாள்தோறும் திட்டமிடுவதாகவும் இதனால் அவரை தான் முதலில் கைது செய்ய வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். ஆளுநர் ரவி இனிமேலாவது தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.