கருணாநிதி வீட்டில் வெடிகுண்டு; பரபரக்க வைத்த போன் கால் – மிரட்டல் விடுத்த நபர் கைது…!!
தமிழ்நாடு
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாஸ்டர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு, தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பம் தொலைக்காட்சி டிஷ் மூலமாக நேரடியாக சூரியனை பாதித்து வருகிறது. இதனால் 2025ஆம் ஆண்டுக்குள் சூரியனில் பெரியளவில் மாற்றம் ஏற்படும். எனவே உடனடியாக தொலைக்காட்சி நிறுவனம் பயன்படுத்தி வரும் 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று பலமுறை அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தொலைக்காட்சி நிறுவனம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தி வருவதால், கருணாநிதி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநல பிரச்சனைகள் கொண்டவரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.