அமைச்சர் அன்பில் மகேஷை பார்த்தால் பொறாமையாக இருக்கு – உதயநிதி ஸ்டாலின் பேச்சால் சிரிப்பலை..!!
தமிழ்நாடு
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. கொட்டிய மழையிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது நெருங்கிய நண்பனும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷை கலாய்க்கும் விதமாக பேசினார்.
அமைச்சர் சேகர்பாபுவும் இருக்கிறார், நானும் இருக்கிறேன் நாங்கள் எல்லாம் கோவில், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களுக்கு தான் சென்று வருகிறோம், ஆனால் அன்பில் மகேஷ் மட்டுமே மாதம் ஒரு வெளிநாடு டூர் சென்று வருகிறார் எனவும் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு துபாய், சிங்கப்பூர், மலேசியா என சென்றவர் 2 நாட்களுக்கு முன்னர் தான் ஜப்பான் சென்று திரும்பியிருக்கிறார் என்றார்.
இன்னும் அடுத்ததாக எந்த நாட்டுக்கு அவர் செல்லப் போகிறார் என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறினார். இதனால் அமைச்சர் அன்பில் மகேஷை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது என வேடிக்கையாக கூறினார். இதைக்கேட்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நன்றாக படிக்கக் கூடிய மற்றும் போட்டிகளில் வெல்லக் கூடிய ஏழை எளிய மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை பள்ளிக்கல்வித்துறை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.