தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 14ம் திகதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அவரது நீதிமன்ற காவலும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மதிய உணவு உட்கொண்ட போதிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இதய சிகிச்சைப் பிரிவுத் துறை தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள்.
காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அடிக்கடி கால் மரத்து போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை அடுத்து சிகிச்சை நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அவருக்கு மீண்டும் ஒரு முறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.