தமிழ்நாடு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை நேற்று மாலை துவங்கினார். மகாசக்தி மாரியம்மன் கோவில் முன் பாதயாத்திரையை துவங்கிய அவருடன் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்தனர்.
இந்நிலையில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது…
தி.மு.க., இரண்டரை ஆண்டு ஆட்சியை முடித்துள்ளது. ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் இருந்த வளர்ச்சி தற்போது குறைந்துள்ளது.
கடன் வாங்குவதில், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்து, தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வந்தது, திமுக ஆட்சியின் சிறப்பு.
மது இல்லாத, கொலை, கொள்ளை இல்லாத தமிழகம் உருவாக பாஜக யாத்திரை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஊழல் இல்லாத இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார்.
ஆனால் இங்கு மகனுக்காகவும் மருமகனுக்காகவும் ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு வைத்து விற்பனை செய்தது. இதன் காரணமாக, தீபாவளியின் போது மட்டும் 20 கொலை, கொள்ளைகள் நடந்துள்ளன.
தகுதி வாய்ந்த அனைவரும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலேயே, நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆனால் திமுக பிரமுகர்கள் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுவதற்காக, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி, மக்கள் முன் நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது பல நீதிமன்றங்களில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல் மிகுந்த அரசாக திமுக அரசு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.