இந்தியா
Trending

ஆளுநர் ரவி இனி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை – செல்வப்பெருந்தகை பாய்ச்சல்…!!

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் ஆளுநர் ரவிக்கு துளியும் அக்கறையில்லை என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது…

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக இயற்றி, ஆளுநருக்கு அனுப்பிய 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, அந்த மசோதாக்களை தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயல் உள்நோக்கம் கொண்டது. ஆளுநருக்கு எங்களது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம். ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என்பது, அதை நிராகரிப்பது என்றுதான் அர்த்தம் என்று சிறுபிள்ளைத்தனமாக பேசியது பலரது கண்டனத்திற்கு உள்ளானது.

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் அரசியல் சட்டங்களை ஆராய்ந்து, ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி தெளிவாக கூறியிருந்த பின்பும், அதையெல்லாம் மீறி தான்தோன்றித்தனமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் அக்கறையில்லாத ஆளுநர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். இல்லையென்றால், ஒன்றிய அரசு ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button