உதயநிதியை முதலமைச்சராக்க பிளான் போடுறாங்க; நடக்கவே நடக்காது – சரமாரியாக அட்டாக் செய்த எடப்பாடி..!
தமிழ்நாடு
தருமபுரியில் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஏழைப் பெண்களின் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால், இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குற்றச் செயல்களும் அதிக அளவில் நடந்து வருகிறது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 100 சதவீதம் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் பேசி வருகிறார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். மன்னராட்சி முறையைப் போல, திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின். தற்போது ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் எனப் பேசினார்.