இனி உங்களுக்கு இடமில்லை – அதிபராக பதவியேற்ற மறுநாளே இந்திய ராணுவத்தை வெளியேற்றிய மாலத்தீவு அதிபர்…!!
மாலத்தீவில் இதற்கு முன்பு அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவரது காலத்தில் தான் இந்தியா மாலத்தீவு உறவுகள் மேம்பட்டது. மாலத்தீவுக்கு இந்தியா பல உதவிகளை மேற்கொண்டது. மேலும், மாலத்தீவுக்கு இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அங்குள்ள ரேடர்களை கவனிக்க இந்திய ராணுவம் அங்கே இருந்தது.
இருப்பினும், இதை மாலத்தீவு ஜனநாயக கட்சியின் முகமது முய்ஸு கடுமையாக எதிர்த்தார். மாலத்தீவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், முகமது முய்ஸு இதை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்த நிலையில், அவர் தேர்தலில் வெல்லவும் செய்தார்.
இதற்கிடையே முகமது முய்ஸு மாலத்தீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் போது தான், மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு முகமது முய்ஸு அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தீவுகளின் கூட்டமான மாலத்தீவில் திடீரென யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்படும் போது அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, கடல் வழியாகப் போதைப் பொருள் கடத்துவோரைத் தடுக்க இந்திய விமானங்கள் பயன்படுகிறது. இந்தியா ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களின் பங்களிப்பை மாலத்தீவு முய்ஸு ஒப்புக் கொண்ட போதிலும், வெளிநாட்டு ராணுவம் மாலத்தீவில் இருப்பதில் மக்களுக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.
மாலத்தீவு மக்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் சாத்தியமான தீர்வுகளைக் காண இரு அரசும் விவாதிக்கவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மாலத்தீவு அதிபராக உள்ள முகமது முய்ஸு சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்திய ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் அவர் இந்தியாவை நேரடியாகக் குறிப்பிடாமல், எந்தவொரு நாட்டின் ராணுவமும் நிச்சயம் மாலத்தீவில் இருக்காது. தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். இதில் எந்தவொரு நாடும் தலையிடக் கூடாது என்றார்.