தமிழ்நாடு
மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசியது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுய விளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியிருப்பது அருவருப்பின் உச்சக்கட்டம். தொடர்ந்து சமுதாய விரோத கருத்துக்களை பேசி பரபரப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கக் கூடிய ஒரு நபர் இவர். தரக்குறைவாக பேசுவதையே தன் தரம் என்ற கொள்கையுடையவர் இந்த நபர். நடிகை திரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகானை உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சு சுதந்திரம் என்கிற பெயரில் சமுதாயத்தை சீர்கெடுக்கும் இந்த நபரை இனி ஊடகங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.