10 ஆண்டுகள் திருமணத்தைத் தள்ளிவைத்தது ஏன்? – பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் விளக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன்னைவிட 24 வயது மூத்த பெண்ணுடன் காதலில் விழுந்தபோது, அவருக்கு வயது 15, அவரது காதலியும் தற்போதைய மனைவியுமான பிரிஜிட் மேக்ரானுக்கு வயது 40.
மேக்ரானுடைய நாடக ஆசிரியையாக இருந்த பிரிஜிட்டிடம் மேக்ரான் தனது காதலை வெளிப்படுத்தியபோது, பிரிஜிட்டின் மகளான லாரன்ஸ் அவரது வகுப்பில் அவருடன் படித்தார்.
அதாவது, அப்போதே பிரிஜிட்டுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவருடைய மூத்த மகன், மேக்ரானைவிட இரண்டு வயது மூத்தவர்.
பிரிஜிட்டின் கணவர் பெயர் André-Louis Auzière. மேக்ரானை சந்தித்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்துகொண்ட பிரிஜிட், அடுத்த ஆண்டு, அதாவது 2007ஆம் ஆண்டு மேக்ரானை திருமணம் செய்துகொண்டார்.
தான் ஏன் மேக்ரானை திருமணம் செய்வதை 10 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்பது குறித்து தற்போது விளக்கியுள்ளார் பிரிஜிட்.
தான் திருமணத்தைத் தள்ளி வைத்ததால், மேக்ரான் தனது வயதுடைய யாரையாவது காதலிக்கக்கூடும் என தான் எண்ணியதாக தெரிவித்துள்ளார் பிரிஜிட்.
தன்னிடம் மேக்ரான் காதலை வெளிப்படுத்தியபோது, தனக்கு அவரது சம வயதுள்ள மூன்று பிள்ளைகள் இருந்ததாக கூறியுள்ள பிரிஜிட், தங்கள் காதலால் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், எனது வாழ்க்கையையும் நான் இழக்க விரும்பவில்லை என்று கூறும் பிரிஜிட், 2007ஆம் ஆண்டு மேக்ரானை திருமணம் செய்துகொண்டதாக கூறுகிறார்.
மேக்ரான் அரசியலில் நுழைந்த நேரத்தில், அவர் தன் ஆசிரியையை முத்தமிடும் ஒரு புகைப்படம் மீண்டும் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.
இன்னும் காதலுடன் தங்கள் வாழ்வைத் தொடரும் மேக்ரான் பிரிஜிட் தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை. தன் மனைவி பிரிஜிட்டின் பிள்ளைகளுக்கு வளர்ப்புத் தந்தையாக இருக்கும் மேக்ரானுக்கு, அவர்கள் மூலமாக ஏழு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.