இஸ்ரேல் காசா மோதல் விவகாரத்தில் சுவிஸ் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள், மக்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன.
Blick செய்தித்தாள் நடத்திய ஆய்வொன்றில், சுவிஸ் மக்களில் 30 சதவிகிதம் பேர் பாலஸ்தீனியர்களுக்கும் 33 சதவிகிதம் பேர் இஸ்ரேலியர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம், நாடு முழுவதும் 16,000க்கும் மேற்பட்டோரிடம் இஸ்ரேல் காசா மோதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஆய்வை தலைமையேற்று நடத்திய Michael Hermann கூறுகையில், மத்திய கிழக்கு மோதல் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதால், தற்போதைய போர் தொடங்குவதற்கு முன்பே பலர் ஏற்கனவே அது குறித்த ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்கிறார்.
அதிகமான வலதுசாரி வாக்காளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளனர். அதேபோல, ஜெர்மன் பேசும் பகுதியில் 43 சதவிகிதம் பேர் பாலஸ்தீனியர்கள்தான் போருக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் 27 சதவிகிதம் பேர் மட்டுமே அவ்வாறு கூறுகின்றனர்.
ஆனாலும், ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது தற்காப்புக்காக போரிடுவதற்கு சுவிஸ் மக்களிடையே வலுவான ஆதரவு உள்ளது. 72 சதவிகிதம் பேர், காசா பகுதியில் இராணுவப் படையைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளனர்.