அர்ஜெண்டினாவின் பண வீக்கம் 140 சதவிகிதம் அதிகரித்து, அத்தியவாசியப் பொருட்கள் கூட ஆடம்பரமாக மாறின. அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகியதால் அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவிய சூழலில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைந்த மக்களுக்கு, நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசினார் வலதுசாரி கட்சி வேட்பாளர் ஜேவியர் மிலே.
பொருளாதார நிபுணர், திரைப்பிரபலம் என பன்முகம் கொண்ட ஜேவியர், நாட்டின் அதிபராகி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று, இறந்து போன தனது நாய் கனவில் வந்து ஆரூடம் சொன்னதாக அறிவித்தார். இறந்து போன வளர்ப்பு நாயான கோனான் மீது அலாதி பிரியம் கொண்ட ஜேவியர், அதன் செல்களை எடுத்து குளோனிங் முறையில் 5 நாய்களை உருவாக்கி இருந்தார்.
இதனால், ஜேவியரின் மீதான நம்பிக்கை அந்நாட்டு மக்களுக்கு அதிகரித்தது. இதன் நீட்சியாக, தான் அதிபரானால் என்னவெல்லாம் செய்வேன் என்று அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். நாட்டிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுவதாக கூறிய அவர், அர்ஜென்டினாவை டாலர் தேசமாக மாற்றுவேன் என்று உறுதி அளித்தார்.
அதாவது, மத்திய வங்கியை மூடி விட்டு, அந்நாட்டு நாணயமான பெசோவிற்கு பதிலாக அமெரிக்க டாலரை அறிமுகம் செய்வேன் என்று கூறினார். அரசின் செலவினங்களுக்கு கடிவாளம் போடப்படும் என்று தெரிவித்த அவர், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் பயன்படுத்திய DRAIN THE SWAMP, அதாவது ஊழலை வேரறுப்பேன் என்ற பொருள் பொதிந்த சொற்றொடரை ஜேவியர் ஆதரவாளர்களும் முழங்கினர்.
மனித உறுப்புகளை விற்பதை சட்டப்பூர்வமாக்குவேன் என்றும், கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவேன் என்றும் நூதன அறிவிப்பை முன்மொழிந்தார். துப்பாக்கி பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்துவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். பருவநிலை மாற்றம், பாலியல் கல்வி ஆகியவை ஏமாற்று வேலை என்றும் ஜேவியர் விமர்சித்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் 99 புள்ளி 4 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதில் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜேவியர், 55 புள்ளி 7 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த ஜேவியர், அப்போது முதல் அர்ஜென்டினாவின் மறு ஆக்கம் தொடங்குவதாக கூறினார்.
உலக அளவில் லித்தியம் அதிகம் கிடைக்கும் நாடுகளில், அர்ஜென்டினா 4 ஆம் இடத்தில் உள்ளது. தற்போது, லித்தியத்திற்கு உலக அளவில் அதிக தேவையும் இருக்கிறது. எனவே, அமெரிக்க டாலரை அந்நாட்டின் நாணயமாக அறிவிக்கும் பட்சத்தில், லித்தியத்தை உலக நாடுகள் டாலரின் மதிப்பில் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால், அர்ஜென்டினாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று ஜேவியர் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 10 ஆம் திகதி பதவி ஏற்க உள்ள ஜேவியர் மிலேவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-அர்ஜென்டினா உறவை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.