தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 2024 மே மாதம் நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெள்ளிவிழா ஆண்டாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியலில் பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவெய்துவதை யொட்டி வெல்லும் சனநாயகம் என்ற முழக்கத்தோடு வரும் டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டை நகரை ஒட்டியோ அல்லது நகருக்குள்ளோ வைக்க வேண்டாம் என்றும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இருப்பதால் புறநகர் பகுதிகளில் மாநாட்டை நடத்திக் கொள்ளுமாறும் விசிக தலைமையிடம் திருச்சி காவல்துறையினர் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து எங்கே மாநாடு நடத்தலாம் என்பது குறித்து தீவிர டிஸ்கஷன் நடத்திய விசிக தலைவர் திருமாவளவன் கடந்த வாரம் திருச்சிக்கு சென்று இடங்களை ஆய்வு செய்தார்.
இறுதியாக திருச்சி சிறுகனூரில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக பிரம்மாண்ட மாநாடு நடத்தியதே, அதே இடம் தான். திருமாவளவனுக்காக தனது நிலத்தை விசிக மாநாடு நடத்திக் கொள்ள கொடுத்திருக்கிறார் அமைச்சர் நேரு. ஏற்கனவே அந்த இடம் ஓரளவு சுத்தமாக தான் இருக்கிறது. இதனால் பெரிய பொருட் செலவில் நிலத்தை சுத்தம் செய்து மைதானம் போல் தயார் செய்ய தேவையில்லை.
விசிக நடத்தும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.