அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் 34 வயதான மாத்யூ ஜாக்ரஸ்யூஸி (Matthew zakrzewsi) குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் நபராக பணியாற்றி வருகிறார். இவரின் கண்காணிப்பிலிருந்த குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தொடர்ந்து குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில் முடிவில் இவர் மீது 34 பாலியல் வன்கொடுமை புகார்கள் உறுதிசெய்யப்பட்டன. அதில் 14 வயதிற்கும் குறைவான சிறுவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், இவரின் கண்காணிப்பில் இருந்த 16 சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 17 சிறுவர்களுக்கு ஆபாசப் படத்தைக் காட்டியதாகவும் நிரூபிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு 707 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த நபர் பாலியல் ரீதியான மனநோயினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அவரின் வீட்டைச் சோதனை செய்ததில், கணினியில் மனநோய்க்கான புத்தகங்களும், குழந்தைகளிடம் அத்துமீறும் செயலை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த நடவடிக்கைகள் குறித்து அந்த நபர் பெருமை கொள்ளுவதாகவும், தான் குழந்தைகளுக்கு முகத்தில் சிரிப்பை கொண்டுவந்ததாகவும் கூறியுள்ளார்.