லியோ படத்தில் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவருடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியும் இருக்கும்; குஷ்பூ, ரோஜாஇ கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவை போட முடியவில்லை. அவரை கண்ணிலேயே காட்டவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு த்ரிஷா உட்பட திரையுலகிலிருந்து பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். அதேசமயம் மன்சூர் அலிகானோ அலட்சியமான விளக்கத்தை நேற்று முன் தினம் கொடுத்திருந்தார். மன்சூரின் விளக்கம் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவரை நடிகர் சங்கத்திலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றனர்.
சூழல் இப்படி இருக்க தேசிய மகளிர் ஆணையமும் த்ரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறது. மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையே நான் மன்னிப்பு கேட்கும் சாதி இல்லை. தவறாக எதுவும் பேசவில்லை என்றும் மன்சூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரம் குறித்து பேசுகையில், ஒரு நடிகரின் கதாபாத்திரமாகத்தான் நான் அந்தக் காட்சியை சாதாரணமாக சொன்னேன். தவறாக எதுவும் சொல்லவில்லை. த்ரிஷா நல்ல நடிகை. அவர் கோபப்பட்டு பேசியிருக்கிறார். அடுத்த படத்தில் நாங்கள் இணைந்து நடிப்போம் என்றார்.
மன்சூர் அலிகானுடன் இனி இணைந்து நடிக்கவே மாட்டேன் என த்ரிஷா சொல்லியிருக்கும் சூழலில் த்ரிஷாவும் தானும் சேர்ந்து நடிப்போம் என்று மன்சூர் சொல்லியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர் அடங்கவே மாட்டார் போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.