சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கையின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டாலும், இரண்டு தரப்பு கிரிக்கெட் மற்றும் ஐசிசி போட்டிகளில் இலங்கை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (21) அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறாமல் தென்னாபிரிக்காவில் நடத்தப்படும் என ஐசிசி இன்றையதினம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நவம்பர் 6 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், மறுநாள் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால கட்டுப்பாட்டுக் சபை மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதன் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜே ஷாவுடன் தொலைபேசியில் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஐசிசியின் தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அலி சப்ரிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை பொதுச் சபையில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபையின் நீண்ட கலந்துரையாடலை அடுத்து, இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இரத்து செய்வதை தொடர்வதற்கு ஏகமனதாக தீர்மானித்ததாக சபை அறிவித்துள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் உறுதியற்ற தன்மையால், 2024 இல் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்தை தென்னாப்பிரிக்காவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் கிரிக்கட் போட்டிகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வா கிரிக்பஸ் இணையத்தளத்திடம் கூறுகையில், இலங்கையை வழமை போன்று கிரிக்கெட் விளையாட அனுமதிக்குமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.