அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதாகும் கெல்சீ ஹேட்சர் என்ற பெண் ஒருவருக்கு மிகவும் அரிதாக இரண்டு கர்ப்பப்பை உள்ளது. தற்போது அவரது இரண்டு கர்ப்பப்பையிலும் குழந்தை உருவாகியுள்ளது என்பதுதான் ஆச்சர்யத்திற்கு காரணம். இப்படி இரண்டு கர்ப்பப்பை இருப்பதை கர்ப்பப்பை டிடெல்பிஸ் (uterus didelphys) என அழைக்கிறார்கள்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7, 4 மற்றும் 2 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தபோது இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு ஹேட்சர் தாயாக உள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது. இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றுதான் நினைத்திருந்தோம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில், உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று சொன்னதும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது ஒன்றல்ல, இரண்டு குழந்தை வரப் போகிறது. இரண்டு வாரங்களாக நானும் என் கணவரும் இதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறுகிறார் ஹேட்சர்.
ஹேட்சரின் பிரசவத்தில் இருக்கும் தனித்தன்மை என்னவென்றால் அவரது இரண்டு கர்ப்பப்பையிலும் குழந்தை உருவாகியுள்ளது. இது அதிக ஆபத்தானது என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். ஏனென்றால் ஒவ்வொரு கர்ப்பப்பையில் வெவ்வேறு நேரத்தில் வலி ஏற்படலாம். இதனால் ஒரு குழந்தை பிறந்த அடுத்த சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் கழித்து கூட இன்னொரு கர்ப்பப்பையில் குழந்தை பிறக்கலாம். இயற்கையான முறையில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஹேட்சர் முடிவு செய்திருந்தாலும், இதில் நிறைய சிக்கல்கள் உள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
வழக்கமான முறையில் குழந்தை பிறப்பதை விட சிசேரியன் செய்வது கூடுதல் ஆபத்தாகும். ஏன் என்றால் சிசேரியனின் போது இரண்டு கர்ப்பப்பையிலும் கீற வேண்டியிருக்கும். இதனால் அதிக ரத்தம் வெளியேறக் கூடும். இரண்டு கர்ப்பப்பை உள்ள பல பெண்களுக்கு நான் மருத்துவம் பார்த்துள்ளேன். அவை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் இந்தமுறை இரட்டை குழந்தையாக உள்ளது என அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள டாக்டர் ரிச்சர்ட் டேவிஸ் கூறியுள்ளார்.
90,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 5.5 சதவிகித நபர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே குழந்தைபேறு இல்லாத பெண்களிடத்தில் 8 சதவிகிதமாகவும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களிடத்தில் 13.3 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த இரண்டு பிரச்சனைகளும் உள்ள 24.5 சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை குறைபாடு உள்ளது. மக்கள்தொகையில் 3.9 சதவிகித பெண்களுக்கு ஆர்குவேட் கர்ப்பப்பை பிரச்சனை உள்ளதை பொதுவாக பார்க்க முடிகிறது. இதுதவிர சில குறிப்பிட்ட நபர்களிடத்தில் செப்டேட் கர்ப்பப்பை குறைபாடும் உள்ளது.