தமிழ்நாடு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் டிசம்பர் 3ஆம் திகதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், டிசம்பர் மாதத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.