தமிழ்நாடு
தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியான பரபரப்பு மிகுந்த பேச்சுக்களுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்து கவனத்தை ஈர்த்தார். லியோ படத்தில் பாலியல் வன்கொடுமை காட்சிகளே இல்லை என்றும், த்ரிஷா குறித்தும் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இதனால் கடும் கோபமடைந்த த்ரிஷா, மன்சூர் அலிகானை இழிவான நபர் என்று விமர்சித்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
த்ரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு சிரஞ்சீவி, குஷ்பு, ரோஜா, நடிகர் சங்கம் என பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை ஏன் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கக் கூடாது எனவும் நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியது. இதற்கு ஆவேசமாக பதிலளித்த மன்சூர் அலிகான், மன்னிப்பு கேட்கவே முடியாது என அறிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்…
அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும். அவர் இன உணர்வு மிக்க தமிழர். எல்லோரும் சேர்ந்துகொண்டு அவரை சீண்டும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் த்ரிஷா விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. ஏனெனில் மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்றே எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்து மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார். அவர் இயற்கையாகவே வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். அந்த அடிப்படையில் இவ்வாறு பேசியிருக்கலாம். அதனை இவ்வளவு பெரிய பிரச்னையாக்கி விவாதிக்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி. நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. நடிகர் விஜய் படத்துக்கு ஒரு பிரச்னை என்றபோது எங்கே சென்றது? இப்போது கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள நிலையில்தான் நடிகர் சங்கம் என ஒன்று இருப்பதே தெரிகிறது என்று தெரிவித்தார்.