இஸ்ரேல் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தத்தில் கத்தார் மத்தியஸ்தானத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
அடுத்து சுமார் 4 நாட்களுக்கு இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் தங்களிடம் இருக்கும் பிணையக் கைதிகளில் முதல் பேட்ஜ் பிணையக் கைதிகளை இப்போது விடுவித்துள்ளனர். 24 இஸ்ரேல் பிணையக் கைதிகள் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பியுள்ளனர்.
அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் இணையும் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், செஞ்சிலுவைச் சங்க வாகனங்களும் எகிப்து எல்லையில் இருந்து காசாவுக்குள் வந்துள்ளது. காசா மக்களுக்குத் தேவையான உதவிகள் இந்த நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் பிணையக் கைதிகளை விடுவித்தது.
அதேபோல இஸ்ரேலும் தனது சிறையில் இருக்கும் பிணையக் கைதிகளை விடுவித்தது. போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று வெள்ளிக்கிழமை ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக மொத்தம் 24 பிணையக் கைதிகளை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் 39 பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சிறைகளில் இருந்து விடுவித்ததை கத்தார் உறுதிப்படுத்தினார்.
ஹமாஸ் விடுவித்த 24 பேரில் 13 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், மேவும், அவர்களில் 10 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர். மேலும், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். அதேநேரம் நேற்று அமெரிக்கர்கள் ரிலீஸ் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், போர் நிறுத்தம் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அதில் அமெரிக்கர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.