நான் கையூட்டு பெற்றதற்கு ஆதாரம் இருக்கிறதா? – மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை விடும் சவால்…!!
தமிழ்நாடு
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பின் அளவை ஒரு சதவீதம் குறைத்து விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விலையை ஏற்றினால் தமிழக அரசு மீது நேரடியாக விமர்சனங்கள் எழும் என்பதால் ஆவின் பாலின் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்வதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் பச்சை பால் பாக்கெட் விவாகரத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை வெளியிட்ட அந்த அறிக்கையில் உண்மை இல்லை என்றும் வடமாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து மனோ தங்கராஜின் பேட்டிக்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். “திரு மனோ தங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு எனக் குறிப்பிட்டுள்ளார்.