தமிழ்நாடு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை வெளியிட்ட அந்த அறிக்கையில் உண்மை இல்லை என்றும் வடமாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து மனோ தங்கராஜின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார் அண்ணாமலை. இதுகுறித்த அவரது டிவீட்டர் பதிவில், “செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்திற்குள் தன் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை பொது வெளியில் வெளியிட வேண்டும் என கெடு விதித்தார்.
மேலும் அதனை நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்றும் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். இதுதொடர்பான அவரது டிவீட்டில், “ரபேல் வாட்ச் கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையைதான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த ட நாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம் மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!” என காட்டமாக கூறியுள்ளார்.