பூதாகரமாகும் சேரி மொழி சர்ச்சை; குஷ்புவை கைது செய்யுங்க – கமிஷனர் அலுவலகத்தில் விசிக புகார்..!!
தமிழ்நாடு
சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. திரையுலகை சேர்ந்த பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவும் மன்சூர் அலிகானுக்கு தனது சமூக வலைளதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது திமுக பிரமுகர் ஒருவர், மணிப்பூர் விவகாரத்தில் பேசாத குஷ்பு த்ரிஷாவுக்கு மட்டும் பேசுகிறார் என்று தரக்குறைவாக டிவீட்டியிருந்தார். இதனால் கடுப்பான குஷ்பு, உங்களை போல் சேரி மொழி பேச முடியாது என பதிலடி கொடுத்தார். சேரி மொழி என நடிகை குஷ்பு கூறியது பெரும் சர்ச்சையானது. சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து சேரி என்றால் ஃபிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம் என விளக்கம் கொடுத்தார் நடிகை குஷ்பு. இதன் பிறகு குஷ்புவுக்கு கண்டனங்கள் மேலும் வலுத்தன. சேரி மொழி என்று சொல்லி பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய தனது டிவீட்டை நீக்க வேண்டும் என்றும் என்றும், குஷ்பு மன்னிப்பு கேட்கா விட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ரஞ்சன்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கார்த்திக் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சேரி மொழியை அவமதித்ததற்காக நடிகை குஷ்பு மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.