ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் – இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்…!!
ஜனாதிபதி ரணில் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அமைச்சரவைக்குள் முரண்பட்டுக்கொண்டு இருப்பதைவிட ஒதுங்கிக்கொள்வதே நல்லது எனவும் ஒரு மாத காலமாக கிரிக்கெட்டின் பெயரை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர். அரசாங்கத்தை கவிழ்ப்பதே சிலரது தேவையாக உள்ளது என சுட்டிகாட்டியுள்ளார்.
நாங்கள் யாரையும் பிடித்து வைத்துக்கொண்டில்லை. விரும்பியவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்ளலாம். அத்துடன் அடுத்த வருடம் தேர்தலுக்கான குறித்த காலம் வரை இந்த அரசாங்கமே தொடரும். அந்த வகையில் ஜனாதிபதியை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் எவருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்க முடியாது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் விலகிச் செல்ல முடியும். அமைச்சரவையில் முரண்பட்டுக்கொண்டு இருக்க முடியாது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தில் பலர் இருக்கின்றனர் என்றார்.