குஷ்பு போட்ட ஒரு ட்வீட்; வீதியில் இறங்கிய காங்கிரஸ் – என்ன இந்த அளவுக்கு போயிட்டாங்க..!!
தமிழ்நாடு
நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து மணிப்பூர் விவகாரத்திற்கு குரல் கொடுக்காமல் இதற்கு மட்டும் பேசுகிறீர்களே என திமுக நிர்வாகி ஒருவர் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த குஷ்பு, உங்களை போல் என்னால் சேரி மொழியில் பேச முடியாது என தெரிவித்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்த குஷ்பு தான் பேசியது பிரெஞ்சு வார்த்தை என்றும் பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படுவது உறுதி என அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி அணியினர் குஷ்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனை முன்னிட்டு சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் அந்த சாலையில் செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் குஷ்பு வீடு அமைந்துள்ள சாலைக்கு பதிலாக பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு அங்கு காங்கிரஸ் கட்சியினர் திண்டனர். மாநில எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் நடிகை குஷ்புவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், குஷ்புவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், சாணி மற்றும் துடைப்பத்தால் அடித்தும் தங்களின் எதிர்ப்பை காண்பித்தனர்.
குஷ்புவுக்கு எதிராக நடைபெற்ற இந்த பேராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் வழக்கு தொடரப்படும் என்றும் ரஞ்சன்குமார் எச்சரித்தார். மேலும் நடிகை குஷ்புவை நீக்கக்கோரி நடிகர் சங்கத்தில் மனு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.