தமிழ்நாடு
பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி; திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒருபகுதியாக திருவையாறு சட்டசபை தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. கைலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள் திருவையாறுக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். கைலாயத்தில் கிடைக்கும் இறைவனின் காட்சி திருவையாறில் கிடைப்பதாக ஐதீகம். அத்தகைய புண்ணிய பூமி திருவையாறில் காவிரி அன்னையை வணங்கி, பிரதமர் மோடி மீது கொண்ட பேரன்பை, நடுக்காவேரி கிராமத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை 12 கிமீ தொலைவுக்கு தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
நடுக்காவிரிப் பகுதியான இந்தப் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், 40,000 ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் செய்கிறார்கள். நெல், கரும்பு, வெற்றிலை என இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருள்கள், நாடு முழுவதும் விற்பனையாகின்றன. இந்தப் பகுதியில், மகளிர் சுய உதவிக் குழுவுக்கான மத்திய அரசு கடன் உதவி, கோகுல் திட்டம் மூலமாக கறவைமாடு வாங்க மானியத்துடன் கடன் உதவி, தொழில் முனைவோருக்கான முத்ரா கடன் உதவி என மத்திய அரசின் திட்டங்களை இந்தப் பகுதி மக்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தார். அதன் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து போது, காவிரி நதி நீர் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் டெல்டா பகுதிக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் கர்நாடகத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மேகதாது அணையைக் கட்டுவோம், காவிரி நதி நீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நீர் கிடைக்காமல், நம் கண் முன்னால் நிலங்கள் தரிசு நிலமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தொகுதிக்கோ, மக்களுக்கோ, விவசாயத்துக்கோ ஒன்றுமே செய்ததில்லை. மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்த போது கேரள மாநிலத்தில் நடந்த ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி. திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி. இந்த ஊழல் மலிந்த, திமுக வை முற்றிலுமாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.