இந்தியா
Trending

பாஜகவோடு நீங்களும்தான் கூட்டணி வச்சீங்க – திமுகவுக்கு எதிராக சீறிய எடப்பாடி…!!

இந்தியா: தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவுக்கு சிறுபான்மையின மக்களின் வாங்கு வங்கி குறைந்துவிட்டதாக பேசப்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்ட நிலையில், சிறுபான்மையினர் மக்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். தான் பேசும் இடங்களில் எல்லாம் சிறுபான்மையினர் என்ற வார்த்தையை அவர் சொல்லத் தவறுவதில்லை.

இந்த நிலையில் கோவையில் நேற்று ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மையினர் காவலர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் உள்ள இரண்டரை ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கு என்ன நல்லது செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். எந்த கிறிஸ்தவரையாவது ஜெருசலேம் புனித பயணத்துக்கு அனுப்பியுள்ளதா?” என்று குறி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, “தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காக திமுக கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. 1999ஆம் ஆண்டு பாஜக வெற்றிபெற்ற நிலையில், திமுகவினர் முக்கிய இலாகாக்களில் அமைச்சர்களாக இருந்தனர். ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தபோது, பாஜகவின் கொள்கைகள் திமுகவுக்குத் தெரியாதா? பதவி சுகம் வேண்டும் என்றால் கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள் திமுகவினர்.

கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை மக்கள் மறந்துவிடுவார்கள் என எண்ணி பசுந்தோல் போர்த்திய புலியாக வலம் வந்து சிறுபான்மையின மக்களை தந்திரமாக ஏமாற்றும் திமுகவின் சுயரூபத்தை கிறிஸ்தவ மக்கள் புரிந்து கொண்டார்கள். விழித்து கொண்டார்கள், இனி பிழைத்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அதிமுக என்பது மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதங்களையும் உண்மையாக சமமாக மதிக்கும் இயக்கம் அதிமுக. ஜனநாயக நாடான இந்தியாவில் தத்தமது மதங்களின் கடவுள்களை வழிபடுவது தனிப்பட்ட சுதந்திரம். அதையே அதிமுக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button