திமுக இளைஞரணி மாநில மாநாடு; கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு – உதயநிதியின் மெகா திட்டம்…!!
தமிழ்நாடு
இம்மாதம் 17ஆம் திகதி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழை கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு வழங்கி வருகிறது திமுக தலைமை. திமுகவில் எத்தனையோ சார்பு அணிகள் இருந்தாலும் அதில் பிரதான அணியாக விளங்குவது இளைஞரணி மட்டுமே.
ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகிய இருவர் வசம் இருந்த திமுக இளைஞரணி இப்போது கடந்த 5ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது.
நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கிய ஸ்டாலின் மாநகராட்சித் தேர்தல் பரப்புரை, ஊர் ஊராக பிரச்சார நாடகம் என கட்சிப்பணிகளில் ஆரம்பக்காலத்தில் மிகத் தீவிரம் காட்டினார். இதனிடையே திமுகவின் துணை அமைப்பாக 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது.
திருச்சி சிவா, அன்பில் பொய்யாமொழி, நாசர், பரிதி இளம் வழுதி என இளைஞர் பட்டாளத்தோடு தமிழகத்தை சுற்றி சுற்றி வந்த ஸ்டாலின் இளைஞரணியை மிக வலிமையாக கட்டமைத்தார். தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத வகையில் இளைஞர் படை திமுகவில் மிக வலிமையாக திகழ்ந்தது.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் வரும் 17ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை நடத்துகிறார் உதயநிதி. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவிலான திடல் ரெடியாகி வருகிறது.
இந்நிலையில் இளைஞரணி மாநாட்டு மேடையிலேயே நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கும் வகையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அனுப்பி வருகிறார் உதயநிதி. வைகோ, துரை வைகோ உள்ளிட்டோருக்கு திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தனுஷ்குமார் எம்.பி. மூலம் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. இதேபோல் திருமாவளவன், காதர் மொகிதீன், கே.,எஸ்.அழகிரி, உள்ளிட்ட எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தனுப்பும் பணிகள் வேகமாக நடைபெற்ற வருகின்றன.